கயிலாயத்தில் ஒரு நாள்
ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:
குடும்பத்திலே மூத்த பிள்ளை கிட்ட அப்பாவுக்கு பாசம்... கடைசி பிள்ளை கிட்ட அம்மாவுக்கு நேசம்.
அவன் ஜேஷ்ட குமாரன் என்று அப்பா சொல்லுவார்... இது கடைகுட்டின்னு சொல்லுவா அம்மா.
ஒன்னு முதலா பொறக்கனும்... ஒன்னு கடசியா பொறக்கனும்... இடபட்டா பொறந்தா என்னைக்கும் ஆபத்து.
ஒரு மந்திரமே வரும்...
"ஓம் பார்வதீ ப்ரிய நந்தனாய நமஹ"
பார்வதிக்கு ப்ரியமான குழந்தை என்று...
சிவபெருமான் அருகிலே விநாயகர் அமர்ந்தார்... தேவியின் அருகிலே முருகப் பெருமான் அமர்ந்தார்...
அப்படி இரண்டு குழந்தைகளும் வீற்றிருக்கிற பொழுது, விநாயகப் பெருமான் தந்தையாரைப் பார்த்து "அப்பா என் காதை தம்பி கிள்ளினான்".
"முருகா! ஏன் அண்ணா காதை கிள்ளினே?"
"இல்லைப்பா, இவ்வளோ பெரிய காது மொரம் போல இருக்குதே"
அண்ணா மந்திரத்திலே ஒரு மந்திரம்
"ஓம் சூர்ப்பகர்ணாய நமஹ"
பெரிய காதா இருக்குதேன்னு கிள்ளிப் பாத்தேன்னாரு.
"முருகா, பிறவிப் பெருங்கடலிலே வீழ்ந்தவர்களுக்கு உன் அண்ணனாகிய விநாயகனுடைய திருவடியாகிய படகைப் பற்றிக்கொண்டால் சீக்கிரமாக முக்திக்கரையை சேர்வதற்கு காற்று எறிவது அந்த கஜ கர்ணம்".
இது மகத்தான தத்துவம். செவி விசாலமாக இருந்தால் காற்றை எறியும்.
"அப்படியாக உன் அண்ணா பெரிய காதைப் படைத்திருக்கிறான். நீ ஃபிரியான காதை கிள்ளினையே ஏன்டா கிள்ளின?"ன்னாரு.
"அப்பா, நீ என் மேலே கோபிக்கற, அண்ணா என் கண்ணை எண்ணி எண்ணிப் பாக்குறான்".
முருகனுக்கு பதினெட்டுக் கண்கள், அந்த கண்களை விநாயகர் எண்ணினார்.
"விநாயக மூர்த்தீ, ஏன் தம்பி கண்ணை எண்ணினே?".
"அப்பா, அவன் என் தும்பிக்கை நீளத்தை மொழம் போட்டுப் பாக்குறான். என் தும்பிக்கை என்ன வேட்டியா சேலையா மொழம் போட்டு பாக்கறதுக்கு? அதனாலதான் கண்களை எண்ணினேன்"னாரு
இப்படி முருகப் பெருமானும் விநாயகப் பெருமானும் அந்த இளமைப்பருவத்திலே ஒருவரை ஒருவர் அணுகி விளையாடுகிறார்கள்
இதையெல்லாம் பார்த்த சிவபெருமான் உமாதேவியாரை கடைக்கண்ணால் பார்த்து "உன் குழந்தைகளுடைய சேட்டையை பாரு"
இந்தக் கருத்தை சிவப்பிரகாச சுவாமிகள்
அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து தன் ஐய என் செவியை மிகவும்
அறுமுகவன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினான் என
வென்றிடும் பிள்ளையைப் பார்த்து நீ அப்படியும் விகடம் ஏன் செய்தாய் என
மருவும் என் கை நீளம் முழம் அளந்தான் என்ன மயிலவன் நகைத்து நிற்ப
மலையரயன் உதவவரும் உமையவளை நோக்கி நின் மைந்தரைப் பாராய் என
கருதரிய கடலாடை உலகு பெறந்தம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை அருகணைத்து அகமகிழ்ந்து கொண்ட களிப்புடன் உமைகாக்கவே
என்று சிவப்பிரகாச சுவாமிகள் அற்புதமாகப் பாடுகிறார்.
4 கருத்து(க்கள்)
இந்தக் கதையை வாரியார் சுவாமிகள் சொல்லி நேரில் கேட்டிருக்கிறேன். மிக்க நகைச்சுவையான கதையும் பாடலும். :-)
சிவபிரகாச சுவாமிகளின் பாடலையும் எழுத்தில் இட்டிருக்கலாமே. அவ்வளவு கடினமாக இல்லையே?
முதல் குழந்தை மேல் தந்தைக்குப் பாசம்; கடைக்குட்டி மேல் தாயாருக்குப் பாசம் என்று இங்கே சொல்லியிருக்கிறார் வாரியார். இன்னொரு இடத்தில் முதல் குழந்தை மேல் தாய்க்குப் பாசம்; ஏனெனில் தான் மலடி இல்லை என்று நிறுவியதற்காக; கடைக்குட்டி மேல் தந்தைக்குப் பாசம்; ஏனெனில் தான் இன்னும் ஆண்மகன் தான் என்று நிறுவியதற்காக என்று வாரியார் சொல்லுவார். :-)
இன்னொன்றையும் கவனிக்கலாம். உமாதேவியாரால் படைக்கப்பட்டவர் பிள்ளையார். ஐயன் நெற்றிக்கண்களில் இருந்து உதித்தவர் கந்தன். ஆனால் அமரும் போது ஐயன் அருகில் ஐங்கரனும் அம்மை அருகில் ஆறுமுகனும் அமருவதைப் பாருங்கள். :-)
குமரன்,
//சிவபிரகாச சுவாமிகளின் பாடலையும் எழுத்தில் இட்டிருக்கலாமே. அவ்வளவு கடினமாக இல்லையே?//
பாடலை கேட்டு எழுதும் போது எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் ஒவ்வொரு வரியும் எங்கு முடிகிறது என தெரியாததாலும் பாடலை தவிர்த்து வந்தேன்.
பாடலை பதித்துள்ளேன். பிழையிருந்தால் சொல்லுங்கள் திருத்திவிடுகிறேன்.
பாசம் குறித்து உங்கள் விளக்கம் அருமை.
சிறு பிழைகள் இருந்தன. சரியான பாடலை இங்கே தந்துள்ளேன்.
அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து தன் ஐய என் செவியை மிகவும்
அறுமுகவன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினான் என
வென்றிடும் பிள்ளையைப் பார்த்து நீ அப்படியும் விகடம் ஏன் செய்தாய் என
மருவும் என் கை நீளம் முழம் அளந்தான் என்ன மயிலவன் நகைத்து நிற்ப
மலையரயன் உதவவரும் உமையவளை நோக்கி நின் மைந்தரைப் பாராய் என
கருதரிய கடலாடை உலகு பெறந்தம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை அருகணைத்து அகமகிழ்ந்து கொண்ட களிப்புடன் உமைகாக்கவே
பாடலுக்கு நன்றி குமரன்,
அப்படியே நகலெடுத்து ஒட்டியுள்ளேன்
:-)