This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

வாரியாரின் நம்பிக்கை

64 ஆம் நாயன்மாராய் புகழப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள்!

அவரின் சொற்பொழிவை ரசிக்காத, புகழாத பெருமக்கள் இருக்கவே முடியாது ..

குறிப்பு வைத்துக் கொள்ளாமலேயே பல மணி நேரம் பேசும் பெருமை மிக்கவர் அவர்!

லட்சக் கணக்கான பாடல்கள் அவருக்கு மனப்பாடம்.

தினம் ஒரு சொற்பொழிவு நடத்தியச் செம்மல் அவர்!

அத்தகு ஆன்மீகப் பெரியார் வாழ்வில் நடந்த ஒரு நம்பிக்கை மிகு சம்பவம்..

வாரியார் சுவாமிகள் தன் சிறு வயதில் வீணை கற்றுக் கொள்ள தன் மாமா வீட்டிற்குச் சென்று இருந்தார். அவரது ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், வாரியார் சுவாமிகளிடம் "காலை எடுத்து விடுவதே நல்லது.. ரூ 1000( அ) ரூ 2000 ஆகும், நான் வேண்டுமானால் ரூ 500 க்கு எடுத்து விடுகிறேன்" என்றார்.

வீட்டுக்கு வந்த வாரியார் சுவாமிகள் யோசிக்கலானார், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே ரூ 500 கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த அந்த வேலை உடையோனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று நினைத்து , காலை , மாலை என்று இருவேளைகளில் 1000 முறை 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தை வலம் வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

கிருபானந்தவாரியாரின் நம்பிக்கை எந்த அளவிற்கு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது பாருங்கள்.

9 கருத்து(க்கள்)

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

அருமையான பதிவு..

ஒருவரின் நம்பிக்கை அவர் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை கொண்டுவரும்.

நம்பிக்கையில் தொடங்கி வாரியார் வாழ்வில் நடந்த சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள முன்வந்த "நம்பிக்கை" பாசிடிவ் ராமா அவர்களுக்கு நன்றி

வாழ்த்துக்கள்!!

 

Blogger ஜயராமன் சொன்னது�...

வாரியார் என்ற மகத்தான மனிதன் தமிழையும், ஆன்மீகத்தையும் பெருமைப்படுத்தினான்.

அவன் கொவ்வைப் பழ பேச்சை கேட்டு பரவசத்திலும், புன்னகையிலும் ஆழ்ந்து தன்னை மறக்காதவன் எதையோ இழந்தவன்.

வாரியாரின் வாழ்க்கை, கொள்கை, நம்பிக்கை மூன்றையும் இணைத்து வாழ்ந்த பெரு மனிதர்.

அவரிடம் அடைக்கலம் புகுந்த அவர் பெயரை உபயோகப்படுத்தி தாங்கள் வளமாக்கிக்கொண்ட சிறு பிறவிகள் ஏராளம்.
----------------------------
//இங்கே சொல்லப்பட்ட தனிப்பட்ட சில உதாரணங்களை தவிர்த்துள்ளேன் - கோபி//
----------------------------
என்னத்தை சொல்ல....

நன்றி

 

Blogger G.Ragavan சொன்னது�...

வாரியார் நான் கண்களால் காணாத ஞானகுரு. வற்றாத செந்தமிழ்ச் சுனை. எவ்வளவு அழகாக வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். கால எடுக்குற டாக்டருக்கே ஐநூறு குடுக்கனும்னா.....ரெண்டு காலையும் அந்தக் கால்களில் சத்தையும் குடுத்த முருகனுக்கு....என்ன குடுத்தாலும் தகும். ஆனால் அன்பைக் கொடுத்தாலே போதும்.

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

ஜயராமன்,

உங்கள் பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட தனிப்பட்ட உதாரணங்களை நீக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.

நாம் வாரியாரின் பெருமைகளைப் பற்றி பேசுவோமே...

அவர் பெயரை பயன்படுத்தி முன்னேறி, அவரை மறந்த/அவருக்கு இழிவை ஏற்படுத்தும் தனிப்பட்ட உதாரணங்கள் நமக்கெதற்கு...

நன்றி.

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

ஜி.ரா,

அருமையான விளக்கம்.

 

Blogger ஜயராமன் சொன்னது�...

கோபி அவர்களே, தங்கள் கருத்து புரிகிறது. அதை ஆதரிக்கிறேன்.

பால் பாயசத்தில் பதனீர் கலந்தது போல் அவர்களை பற்றி பேச வேண்டாம் என்கிறீர்கள்.

சரிதான்!!

ஆனால், அவர் வாழ்க்கை எல்லோருக்கும் பாடம். அதில் நாம் கற்க வேண்டியவை ஏராளம். நான் சொன்ன உதாரணங்களிலிருந்து நாம் தெரிந்து கவனமாக இருக்க வேண்டியதும் ஏராளம். அதனால், குறிப்பிட்டேன். ஆனால், ஏன் பூசை வேளையில் இவை....

நன்றி..

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

பாசிடிவ் ராமா அவர்களே. இந்த சம்பவத்தை நாங்கள் அறியக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

 

Blogger VSK சொன்னது�...

வாரியார் சுவாமிகளின் உரையை நேரிலும், எழுத்திலும், ஒளியிலும், ஒலியிலும் கேட்டு மகிழ்ந்தவன், இன்னும் மகிழ்பவன் நான்!

தங்களது இந்தப் பதிவு என்னை மிகவும் பரவசமாக்கியது!

அரசியலுக்கு அங்கே ஒரு 'காமராஜ்' பதிவு போல, இங்கு ஆன்மீகத்திற்கும், 'வாரியார்' பதிவைத் தொடர்ந்து எழுதுமாறு வேன்டுகிறேன்.

தமிழ் மணம் மணக்கட்டும்.!

 

Blogger கால்கரி சிவா சொன்னது�...

பாஸிடிவ் ராமா அவர்களே,

நான் சிறுவயதில் வாரியார் அவர்களின் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை அவர் சொல்ல திருவல்லிகேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் கேட்டிருக்கிறேன்.

வாலி வததிற்கு பிறகு மழைக்காலம் துடங்கும். அது முடிந்தவுடன் சீதையை தேடாலாம் என சுக்ரீவன் கூறுவான். மழைக் காலம் முடிந்துவிடும். ஆனால் சீதையை தேட சுக்ரீவன் முற்பட மாட்டான். அதை நினைவுப் படுத்த லட்சுமணனை ராமன் சுக்ரீவனிடம் தூது அனுப்புவான். அந்த நிகழ்ச்சியை விவரிக்கும் கம்பனின் செய்யுளுக்கு வாரியார் அவர்கள் சுமார் 10 வித மாக பொருள் கூறுவார். அது தனிசுவை. அந்த பேருரையை பதிவிட்டால் மிகுந்த நன்றி உள்ளவனாய் இருப்பேன்.

 

நீங்க சொல்லுங்க

வாரியாரும் சீர்காழியும்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மறைவு குறித்து ஒரு மேடையில் வாரியார் சீர்காழி Dr.சிவசிதம்பரம் அவர்களி்ன் முன்னிலையில் பேசியது:



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

எப்பவுமே அப்பாவ விட புள்ள ஒயர்வா இருக்காது. அது தான் உலகம்.

எனக்குத் தெரிஞ்சி மூனு பேரு இதுக்கு விதிவிலக்கு.

ஒன்னு முருகன்... சிவனுக்கே உபதேசம் பண்ணவன்.

ஒன்னு அபிமன்னன் (அபிமன்யு)

ஒன்னு ஜவகர்... மோதிலாலை விட...

நாலாவது நம்ம சிவசிதம்பரம்.

சீர்காழியும் நானும் சிவசிதம்பரமெல்லாம் கைலாசத்துக்கு போனோம் விமானத்துல பறந்து... எவரெஸ்ட்க்கு போயிக்கறோம்... யாருக்கும் தெரியாது... லட்ச ரூபா விமானம்...

சிவசிதம்பரம் "தாத்தா... அப்பா ஒரு வார்த்தை கூட சொல்லாம மறைஞ்சுட்டார்..." கண்ணீர் விட்டு கதறி அழுதபோது என் உள்ளம் உருகியது...

நல்ல குடும்பம்.. சீர்காழிக்கு அடக்கம், ஒழுக்கம்... அதுக்கு மேல இங்க ஒருத்தரும் சொல்லலை. ஒழுக்கம் உள்ளவர். ஒழுக்கம் இல்லாமதானே வாலி மாண்டான்... ஒழுக்கம் இல்லாமதானே ராவணன் மாண்டான்...

ரொம்ப சீலம் உள்ளவர். நான் ரொம்ப நிறைந்த உள்ளத்தோடு சொல்றேன்.. சீர்காழிக்கு அடக்கம், பக்தி மட்டுமில்லை ரொம்ப சீரிய ஒரு... ஆண்டவனே! (வருத்தப்படுகிறார்)

சித்திரத்திலே கூட பெண்ணை உற்றுப் பார்க்கமாட்டார்... அப்படி...

மனைவியும் ரொம்ப சுலோவாவே இருந்தது.. வேகமா போகலை... சுலோ... சுலோன்னு... (சீர்காழி கோவிந்தராஜனின் மனைவி பெயர் சுலோச்சனா) ரொம்ப அமைதி... நல்ல குடும்பம்...

அந்த உத்தமமான அன்பர் இப்போது தேவலோகத்திலே போய் அங்கே இருக்கிறவங்களை மகிழ்விக்கிறார்...

நன்றி: சீர்காழி வலைத்தளம்

5 கருத்து(க்கள்)

Blogger சிவா சொன்னது�...

கோபி! இந்த வாரம் வாரியார் பேச்சு கேட்டேன். சீர்காழி என்ற ஒரு மாபெரும் கலைஞனை பற்றி அழகாக பேசி இருக்கிறார். கொடுத்தமைக்கு நன்றி. (எனக்கும் சீர்காழியின் பாடல்கள் ரொம்ப புடிக்கும்)

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களைப் பற்றிய வாரியாரின் மொழிகளைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி கோபி.

 

Blogger ஸ்ருசல் சொன்னது�...

கோபி,

அருமையான, அரிய தகவல்.

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

ஸ்ருசல்.

 

Blogger Ganesh சொன்னது�...

அருமை,நானும் கூட வாரியாரின் ரசிகன்

கணேஷ்

 

Blogger வெற்றி சொன்னது�...

கோபி,
வாரியாரின் உரையைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

 

நீங்க சொல்லுங்க

மூடனும் கற்பக மரமும்

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

ஒரு அறிவில்லாத மூடன்... அறிவுக்கும் அவனுக்கும் 50 மைல் எடவெளி... இப்புடீ நடந்து போறான்... வயிறு முதுவுல ஒட்டிங்குது...

தண்ணீர் விடாய் (தாகம்)... கால் போன வழியாப் போறான்... பகல் 12 மணி... கற்பகமரம் எதிருல வருது... இந்த மூடனுக்கு கற்பக மரம்னு தெரியாது.

தேன் குளிர்ச்சி... ஜிலுஜிலுஜிலுன்னு காத்து... ரெண்டு நிமிடம் ஒக்காந்தான்.

"கொஞ்சம் தண்ணியிருந்தா தேவலை"ன்னான்.

கற்பக மரமோல்லோ? தங்க டம்ளர்ல ஐஸ் வாட்டர்... தகர டம்ளர்லயா குடுக்கும்?

கொஞ்சம் தண்ணீர் பருகினான், "சாப்ட்டு தண்ணி குடிச்சா தேவலை"ன்னான்.

இவ்வளவு பெரிய வாழையிலை... டபுள் வரிசையா காய்கறி, சீரகச் சம்பா பச்சரிசி அன்னம், பருப்பு, அப்ப உருக்குன நெய், மிளகு தக்காளி வத்தக் கொழம்பு, ஆப்பிள் மோர், மோர்க்கொழம்பு, அன்னாசிப்பழம் ரசம், விளாம்பழம் பச்சிடி, ஆரஞ்சு கிச்சடி, பாதாம் கீரு, கட்டித் தயிரு, நெல்லிக்கா ஊருகா,

ஒரு புடி புடிச்சான். அதிகமா உண்டா என்ன தோனும்? "கொஞ்சம் படுத்தா தேவலை... பாயிருந்தா தேவலை"ன்னான்.

பத்தமடை பட்டுப் பாய், வெல்வெட்டு தலகாணி, படுக்க வேண்டியது தானே? மடையன். "கீழ படுத்தா ஓனான் வருமே... அரணை வருமே... கட்டில் இருந்தா தேவலை"ன்னான்.

3 அடி அகலம் 6 அடி நீளம் கட்டில் ஏறிப் படுத்தான். தூங்கவேண்டியது தானே? "கட்டில் அகலமா இல்லையே ஒருவேளை உருண்டு விழுந்துடுவமோ பெரிய கட்டில் இருந்தா தேவலை"...

6 அடி அகலம் 8 அடி நீளம் கட்டில். தூங்கவேண்டியது தானே? "இவ்வளவு பெரிய கட்டில்ல ஒத்தையா படுக்கறமே"ன்னு நெனச்சான்.

ஒரு 19 வயது இளம் பெண் நைலான் புடவ கட்டினு ரெட்டைப் பின்னல் போட்டு இந்த முடி மயிர வெட்டி அப்படி வளச்சினு ஜிலுஜிலுஜிலுன்னு...

"அம்மா, பராசக்தி, நீங்க யாரம்மா"ன்னு வணங்கலாம்...

"இது பூதமோ"ன்னு நெனச்சான் பூதமாப் போச்சு,

"விழுங்கிடுமோ"ன்னு நெனச்சான் விழுங்கிடுச்சி!

கற்பக மரம் வந்தும் அவனுக்கு இடர்...

மூடனுக்கு என்ன வந்தாலும் அவன் முன்னுக்கு வரமாட்டான்.

4 கருத்து(க்கள்)

Blogger Ramprasath சொன்னது�...

Wonderful.

Hope you will continue.

- Ram

 

Blogger சிவா சொன்னது�...

கோபி! எனக்கு ரொம்ப நாள் ஆசை. வாரியார் சொற்பொழிவு கேக்கணும் என்று. இந்த 'மூடனும் கற்பக மரமும்' கேட்டேன். சிரிக்கவும் சிந்திக்கவும் ஒரு அருமையான சொற்பொழிவு. கொடுத்தமைக்கு நன்றி. கேட்க முடியாதவற்களுக்கு எழுத்திலும் கொடுக்கறீங்களே. உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்,
சிவா

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அருமையான கதை கோபி. அதனை வாரியார் சொல்லக் கேட்கும்படி அமைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.

 

Blogger Paramasivam சொன்னது�...

During my young days, I used to attend his discourses. Now after retirement I could get some cassettes from Saravana Bhavan Hotel. your blogs are really too wonderful to see his other discourses. Thanks a lot.
God bless you.
N.Paramasivam
New Jersey.

 

நீங்க சொல்லுங்க

வள்ளல் வாரியார்

வாரியார் சுவாமிகளின் தமிழ்ப்பணி, சமயப் பணிகள் குறித்து அறிந்தவர் பலர். அவர் ஆற்றிய சமூகப் பணிகள் குறித்து அறிந்தவர் சிலரே.

அவர் சொற்பொழிவு ஆற்றியதன் மூலமாக ஈட்டிய வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை குழந்தைகளின் கல்வி, ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வு உட்பட பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக கொடையாய் வழங்கியதுடன் அத்தகைய நலத்திட்டங்களில் நேரடியாய் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

தர்மபுரியில் செயல்பட்டு வரும் கிருபானந்த வாரியார் உயர்நிலைப்பள்ளி துவங்க வாரியார் சுவாமிகள் ஒரு தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி அதில் ஈட்டிய பணத்தை முழுமையாய் அளித்தார்.

அவர் ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்க "ராமகிருஷ்ண குடில்" அமைப்புக்காக பல காலம் சொற்பொழிவில் ஈட்டிய சுமார் ரூ.27 லட்சம் பணத்தை அளித்தார்.

பத்தாம் வகுப்பு கல்விக்கு பணம் வேண்டி வந்த மாணவர் ஒருவருக்கு (அந்த மாணவர் வேறு சமயத்தை சார்ந்தவராயினும் கூட) கல்விக்கு உதவித்தொகை அளித்து, நல்ல வேலைஅமைய உதவி செய்து, தன் சொந்த செலவில் திருமணமும் நடத்தி வைத்து, நல்ல வாழ்வு அமையும் வரை ஆதரவளித்து பெற்றோரினும் பரிவு காட்டுவது வாரியாரின் வள்ளல் குணம்.

இது போல அவரின் வள்ளல் உள்ளத்தால் பயன் பெற்றவர்கள் ஏராளம்.

1 கருத்து(க்கள்)

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

நீங்கள் சொல்வது உண்மை கோபி. தொடர்ந்து வாரியார் செய்த அறப்பணிகளைப் பற்றியும் எழுதுங்கள்.

 

நீங்க சொல்லுங்க

வணக்கம்


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு, அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், ஆகியவற்றை ஒலி, உரை, புகைப்படங்கள் வடிவில் இற்றைப்படுத்தும் நோக்குடன் இந்த வலைப்பூ துவங்கப்பட்டுள்ளது.

இதில் பங்கு பெற விரும்பும் நண்பர்கள் எனக்கு (higopi[at]gmail[dot]com) தனிமடல் இடவும்.

5 கருத்து(க்கள்)

Blogger Sam சொன்னது�...

உங்கள் நல்ல முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
சாம்

 

Blogger சிவா சொன்னது�...

கோபி! நான் அடிக்கடி ராகவன் ப்ளாக்கில் வாரியார் சுவாமிகள் பற்றி கேட்டுக்கொண்டிருப்பேன். இன்று பார்த்தால் நீங்களே தனி ப்ளாக் ஆரம்பித்து விட்டீர்கள். ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்கள் ப்ளாக்கை குறித்துக் கொண்டேன். இனி தினமும் நான் வருவேன். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே. முதல் பதிவை படித்துவிட்டு மீண்டும் சொல்கிறேன்.

அன்புடன்,
சிவா

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

Sam,சிவா

நன்றி. தினமும் பதிக்க முடியுமா தெரியவில்லை. வாரம் இருமுறை (அல்லது ஒரு முறையேனும்) பதிக்க முயற்சிக்கிறேன்.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

இந்த வலைப்பூவைத் துவங்கியதற்கு மிக்க நன்றி கோபி. நான் இனிமேல் தொடர்ந்து வரும் பதிவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஒரு சின்ன உதவி செய்யமுடியுமா? நீங்கள் இந்த வலைப்பூவில் ஒவ்வொரு முறை பதிவு இடும்போதும் எனக்கு ஒரு சின்ன மின்னஞ்சல் அந்த பதிவின் சுட்டியுடன் அனுப்ப முடியுமா? எந்தப் பதிவையும் விடாமல் படித்து ரசிக்க எனக்கு அது மிக உதவியாக இருக்கும். :-)

 

Blogger சிவா சொன்னது�...

கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது பதியுங்கள்..காத்து கொண்டிருக்கிறேன் நண்பரே..

 

நீங்க சொல்லுங்க